UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

 

 

 

 

 உதயன் சர்வதேச விருது விழா- 2017

 

மாகாண அரசின் அமைச்சர்கள், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் என மண்டபம் நிறைந்தவர்களின் முன்னிலையில் அழகுற நடந்தேறிய உதயன் சர்வதேச விருது விழா-2017

கடந்த 12 வருடங்களாக கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்று வரும் உதயன் சர்வதேச விருது விழாவில இதுவரை 70க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் கனடா மற்றும் இந்தியா இலங்கை இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். உதயன் விருது விழாவில் உதயன் சமூக நல்லுறவு விருது, உதயன் கலை இலக்கிய மேன்மை விருது, உதயன் தலைமைத்துவ விருது, உதயன் வர்த்தக மேம்பாட்டு விருது மற்றும் வெளி நாடுகளுக்குரிய சிறப்பு சாதனையாளர் விருதுகள் என வருடா வருடம் 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் 2017ம் ஆண்டுக்குரிய சர்வதேச விருது விழா கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள The Estate Banquet & Event Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

உதயன் விருது விழாக் குழுவினரின் விசேட அழைப்பின் பேரில் ஒன்றாரியோ மாகாண அரசின் பிரதிநிதிகளாக கல்வி அமைச்சர் திருமதி மிட்ச ஹண்டர், குடியுரிமை மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திருமதி லோறா அல்பான்சே உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கனடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் ஹரி ஆனந்தசங்கரி, சுவான் சென். திருமதி சல்மா சாகிட் மற்றும் மாகாண சபை உறுப்பினரும் பிரதி அமைச்சருமான சூ வொங், மார்க்கம் பிராந்திய சபை உறுப்பினர் திருமதி நிர்மலா ஆம்ஸ்ரோங் மற்றும் கல்விச் சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் ஆகியோர் உட்பட பல சமூகத் தவைர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வருட உதயன் விருது விழாவில் உதயன் சமூக நல்லுறவு விருது, யோர்க் பிராந்திய பொலிஸ் சபை தலைவர் திரு எரிக் ஜோலிவ் அவர்களுக்கும் உதயன் கலை இலக்கிய மேன்மை விருது கலாநிதி நா சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கும், உதயன் தலைமைத்துவ விருது மார்க்க்ம் மிடில்பீல்ட் உயர் கல்லூரி அதிபர் ஜனனி பத்தி அவர்களுக்கும் , உதயன் வர்த்தக மேம்பாட்டு விருது Times Iron Works Inc நிறுவன அதிபர் திரு தேவதாஸ் சண்முகலிங்கம் அவர்களுக்கும் மற்றும் வெளி நாடுகளுக்குரிய சிறப்பு சாதனையாளர் விருதுகளாக தமிழ்நாடு சிறப்பு விருது பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுக்கும் நோர்வே நாட்டுக்குரிய சிறப்பு விருது கலைஞரும் பாடகருமான திரு கோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
இவ்வருட விருது விழாவை வெற்றிகரமாக நடத்த, பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன. CIBC வங்கி மற்றும் வாணி செந்தூரன் சட்ட நிறுவனம் சென்றம் நிதி ஆலோசனை நிறுவனம் மற்றும் CASH POINT நிறுவனம் ஆகியவை உட்பட பல நிறுவனங்கள்ஆதரவை வழங்கியிருந்தன.
விழாவின் நிகழ்ச்சிகளை திரு ராகவன் பரஞ்சோதி சிறப்புற தொகுத்து வழங்கினார்.

உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உதயன் சர்வதேச விருது விழாவின் நிறுவனருமான திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது உரையில் விருது விழாவை வருடந்தோறும் வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும், நன்றி தெரிவித்தார்.
இசை நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன அங்கு கலந்து கொண்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையர்றறினார்கள்.

மேற்படி உதயன் சர்வதேச விருது விழாவில் இவ்வருடம் தமிழக திரைப்படத்துறையில் பின்னணிப் பாடகியாக புகழைத் தனதாக்கியுள்ள செல்வி லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் பிரபல பாடகர் (கனடா) பிரபா பாலகிருஸ்ணன் ஆகியோர் சிறப்புக் கௌரவம் செய்யப்பட்டனர்
விருதுகளைப் பெற்ற அனைத்து வெற்றியாளர்களும் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.