நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும் – ஸ்டாலின்

‘நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும். அப்போது, ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும், மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘கான்ட்ராக்டர்’ துரை ஜெயகுமார், பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறை முறைகேட்டை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளன. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில், 462.11 கி.மீ., நீள சாலைகளை, ஐந்து ஆண்டு பராமரிக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பீதியில் உறைந்து, வீட்டிற்குள் முடங்கி கிடந்த நேரத்தில், ஏப்., 15ல், ‘ஆன்லைன் டெண்டர்’ தாக்கல் செய்ய கடைசி நாள் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், 32 பதிவு பெற்ற முதல்நிலை கான்ட்ராக்டர்கள் செய்யும் வேலையை, ஒரு கான்ட்ராக்டருக்கு வழங்கும் விதத்தில், டெண்டர் விடப்பட்டது என, உயர் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள், 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1,165 கோடி ரூபாய்க்கு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது, 700 கோடி ரூபாய் வரை அதிகம் என்றும், தன் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரிக்க போகிறது. நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும்.அப்போது, ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும், மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும். எந்த ஊழலில் இருந்தும், யாரும் தப்பி விட முடியாது. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.