ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!

அமெரிக்காவில் வரும் ஜூலை 3-ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ‘சேவ் அமெரிக்கா’ (அமெரிக்காவை காக்கவேண்டும்) என்கிற தலைப்பில் பிரமாண்ட பேரணி ஒன்றை தனது ஆதரவாளர்களுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

புளோரிடா மாகாணத்தின் சரசோட்டா நகரில் வரும் ஜூலை 3 (சனிக்கிழமை) டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்களுக்கு அவரது கட்சியினர் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மாபெரும் வெற்றிபெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடினார்.

டொனால்ட் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் மறுத்தது. இதனை அடுத்து அமெரிக்க எலக்டரால் காலேஜ் ஆல் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான டொனால்டு டிரம்ப், ஜோ பைடனின் பதவியேற்பு விழாவுக்கு கூட வராமல் அதனைப் புறக்கணித்தார்.

அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு வந்த டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் சீனாவை விமர்சித்து இருந்தார்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸை பரப்பவிட்டதற்காக சீன அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது புளோரிடா மாகாணத்தில் பேரணி நடத்த உள்ளதை அடுத்து ஓஹியோ மாகாணத்தில் உள்ள வெலிங்டன் நகரிலும் இரண்டாவது பேரணி நடத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இரவு எட்டு மணிக்கு இந்த பேரணி துவங்குகிறது. இந்த பேரணிக்கான செலவில் ஒரு பங்கை குடியரசுக் கட்சி ஏற்கிறது. பிரமாண்டமாக நடக்கும் இந்தப் பேரணியில் வாணவேடிக்கைகள் விடப்படும். அமெரிக்க மக்களுக்கு தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கவே இப்பேரணியை நடத்துவதாக சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக இந்த பேரணியில் டிரம்ப் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.