டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திருக்கோவில் பக்தர்கள் வருவதற்கு அனுமதி வழங்கவில்லை; பூசாரிகள் தினசரி பூஜை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை. கோவிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்.

சட்டசபைக் கூட்டத்தொடரில் கோவில்கள் புதுப்பிக்கும் பணி, தெப்பகுளங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோவில் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கியுள்ளார். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது. அனைத்து திருக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை கட்டாயமல்ல. விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். திருக்கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடுவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.