தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்

புதுடில்லி: தமிழகத்திற்கு நன்றி, நேற்றைய பயணம் மறக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேற்று(மே 26) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் பிரதமர் வந்தார். வழிநெடுகிலும், பா.ஜ.,வினர் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியும் காரில் மெதுவாக சென்றபடி, பா.ஜ.,வினர் மற்றும் பொது மக்களை பார்த்து மகிழ்ச்சி பொங்க கைகளை அசைத்தார். சிவானந்தா சாலை அருகே மாணவியர் பரதநாட்டியம் ஆடி மோடியை வரவேற்றனர். அவர்களை பார்த்த உற்சாகத்தில் மோடி காரில் இருந்து வெளியே வந்து கை அசைத்து வரவேற்பை ஏற்று கொண்டார்.

பின்னர், அரசு விழாவில் ரூ.31,530 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். மத்திய அரசு சார்பில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மதுரை – தேனி அகல ரயில் பாதை; தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றில், ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை – பெங்களூரு விரைவு சாலை உட்பட, புதிதாக ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு நன்றி. நேற்றைய பயணம் மறக்க முடியாதது எனக்கூறியுள்ளார். மேலும், பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், பா.ஜ.,வினர் அளித்த வரவேற்பு, தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தது, வரவேற்பை ஏற்று கொண்ட காட்சிகளும், மத்திய அரசு திட்டங்களை துவக்கி வைத்தது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.