பதிவாளர் எச்சரிக்கை …! திருமண தகவல் இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் கும்பலால் கைது செய்யப்பட்டனர்

திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட புதுடெல்லியில் வசித்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா  ரசகொண்டா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் ஒமோரிலேவா (31) மற்றும் ஒசாஸ் ப்ரீடோ (39).
இவர்கள் அனைவரும்  நைஜீரியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் புதுடெல்லி திலீப் விஹார், நிலோதி பகுதியில், வசித்து வந்தனர். மேலும் கனோன் எவர்ட் மற்றும் கான்டே மேரி ஆகிய இரண்டு  நபர்கள் தலைமறைவாக  உள்ளனர்.
சுற்றுலா விசாவில்  இந்தியா வந்தவர்கள் டெல்லியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் மணப்பெண், மணமகன் தேடுபவர்களே இவர்கள் குறி.   போலி பெயர்கள் மற்றும் சுயவிவரங்களுடன் இவர்கள் ஏமாற்றி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளனர்.இந்த கும்பல் மோசடி திருமண விவரங்களில் அழகான ஆண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருப்பதாகவும் அதிகம் சம்பாதிப்பதாகவும்  தகவல் வெளியிடுவர்.
இவர்களை போலீஸ் மோப்பம் பிடித்து அவர்களிடம் அவர்கள் போலி முகவரியிலேயே நீண்ட நாள் பேசி கண்டு பிடித்து உள்ளனர்
சமீபத்தில் இவர்கள் ஐதராபாத்தை  சேர்ந்த  ஒரு பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்து உள்ளனர்.இந்த புகாரின் பேரில் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை புதுடெல்லி சென்று கைது செய்தனர். அவர்களை ஐதராபாத்திற்கு கொண்டு வந்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து  உள்ளனர்.
இது போல்  சென்னையில் திருமண தகவல் இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த நைஜீரிய கும்பல் ஒன்று டெல்லியில்  கைது செய்யப்பட்டது.
இதையடுத்து, திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடுவோர் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம்,  மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 விசாரணையில் டெல்லியில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக தனிப்படை காவலர்கள் டெல்லி விரைந்துச் சென்று புதுடெல்லி உத்தம் நகரில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ (வயது 31) மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு (வயது 23) ஆகியோரை ஆகஸ்ட் 31 அன்று கைது செய்து விசாரணைக்குப் பிறகு அவர்களிடமிருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய மொபைல் போன் லேப்டாம், வங்கிகணக்கு பாஸ்புக் மற்றும் பணம் ரூ.4,30,000 ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.