மேற்குவங்கத்தில் பல்கலை.வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பல்கலை வேந்தராக, முதல்வரே பதவி வகிக்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மேற்கு வங்க பல்கலைகளின் வேந்தராக கவர்னர் ஜகதீப் தன்கர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மாநில முதல்வரே பல்கலை வேந்தர் பதவியை வகிக்க, மேற்கு வங்க அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக கடந்த மே 26-ல் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்கலை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பிரதிய பாசு தாக்கல் செய்தார்.

இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மசோதாவுக்கு ஆதரவாக 183 உறுப்பினர்களும், எதிராக 40 உறுப்பினர்களும் ஒட்டளித்தனர். இதையடுத்து பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தால், மேற்கு வங்க பல்கலைகளின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜி பதவி வகிப்பார்.

முன்னதாக கடந்த ஏப்ரலில் , மாநில பல்கலை துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.