பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு கூடுகள்… வரத்து அதிகரிப்பு! ரீலர்கள் வருகையால் விலை சரிவும் தவிர்ப்பு

உடுமலை : பிற மாவட்ட ரீலர்கள், உடுமலை அரசு கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது.

இப்பகுதியில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதந்தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். குறிப்பாக, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், மாநில அளவில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. உடுமலை, பழநி, பல்லடம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில், உற்பத்தி செய்யப்படும், பட்டுக்கூடுகளை, உடுமலை மைவாடியில், பட்டு வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு கொள்முதல் மையத்துக்கு கொண்டு வந்து, விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

பட்டுக்கூடு வரத்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நுாலிழை நீளம் மிகுந்த தரமான பட்டுக்கூடுகள் இப்பகுதிகளில் உற்பத்தியாகிறது. எனவே, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள நுால் உற்பத்தியாளர்கள் (ரீலர்கள்) மட்டுமின்றி, கரூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், அவர்களது வருகை அதிகரித்துள்ளது.உடுமலை கொள்முதல் மையத்துக்கு, நேற்று முன்தினம், ஏழு விவசாயிகள், 550 கிலோ பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். குறைந்தபட்சம், கிலோ, 511 ரூபாய்க்கும், அதிகபட்சம், 663 ரூபாய்க்கும் விற்றது. பட்டுக்கூடுகள், 3 லட்சத்து, 33 ஆயிரத்து, 332 ரூபாய் மதிப்பிற்கு விற்பனையானது. இந்த ஏலத்தில், மூன்று நுால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.நேற்று, வரத்து அதிகரித்தது, 10 விவசாயிகள், 965 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஒரு கிலோ பட்டுக்கூடு, குறைந்தபட்சம், 440 ரூபாய் முதல் அதிக பட்சமாக, 637 ரூபாய் வரை விற்றது. சராசரி விலை நிலவரம், 568.84 ரூபாயாக இருந்தது. நேற்று, உடுமலை, அவிநாசி, கரூர் பகுதியிலிருந்து ரீலர்கள் வந்து, பட்டுக்கூடு கொள்முதல் செய்தனர். நேற்று, 5 லட்சத்து, 48 ஆயிரத்து, 788 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.அதிகாரிகள் கூறியதாவது:உடுமலையில் அரசு பட்டுக்கூடு கொள்முதல் மையம் துவங்கியபோது, குறைந்தளவே வரத்து காணப்பட்டது. நிலையான விலை கிடைக்குமா என்ற விவசாயிகள் தயக்கமே இதற்கு காரணமாகும்.

தற்போது ஒரு மாதத்தில் சராசரியாக, 17 முதல், 20 டன் வரை பட்டுக்கூடு வரத்து காணப்படுகிறது.உடுமலை மையத்துக்கு வரும் பட்டுக்கூடு தரமாக உள்ளதால், ரீலர்கள் வருகையும் அதிகரித்து, தற்போது, கோவை, ஈரோடு, சேலம், உடுமலை, கரூர் பகுதியிலிருந்தும் வந்து, பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்து வருகின்றனர். பட்டுக்கூடு விலையும் நிலையாக உள்ளதால், விவசாயிகள் வரத்தும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.