லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் மந்திாி ராஜேஷ் தோபே தகவல்

லதா மங்கேஷ்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திாி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
பாடகிக்கு கொரோனா

பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் வசித்து வருகிறார். 92 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் தென்மும்பையில் உள்ள பிரிச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லேசான அறிகுறிகள் மட்டும் உள்ள போதும், வயது மூப்பின் காரணமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் கூறியதாக லதா மங்கேஷ்கரின் உறவினர் ராச்னா ஷா கூறியிருந்தார்.
உடல்நிலையில் முன்னேற்றம்

இந்தநிலையில் லதா மங்கேஷ்கர் உடல்நலம் குறித்து மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

“லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பிரிச் கேண்டி ஆஸ்பத்திரி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து என்னிடம் கூறினார்கள். அவரின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் ஆஸ்பத்திரி செய்தி தொடர்பாளரை அவரின் உடல்நலம் குறித்து தகவல்களை வெளியிடுமாறு கூறினேன். குடும்பத்தினரிடம் பேசிவிட்டு ஆஸ்பத்திரி நிர்வாகம் லதா மங்கேஷ்கரின் உடல்நலம் குறித்து தகவல்களை வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர்

இந்தநிலையில் லதா மங்கேஷ்கர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதித் சாம்தானி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘லதா மங்கேஷ்கர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்’’ என்றார்.

லதா மங்கேஷ்கர் தனது 13 வயதில் இருந்து பாடி வருகிறார். இதுவரை அவர் பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.