இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

இஸ்ரேலில் கடந்த நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக கடந்த 2019ஆம் அண்டில் இருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அரசுகள் கவிழ்ந்தன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், “தனது நல்ல நண்பருடன் பேசுவதில் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், நெதன்யாகுவின் அற்புதமான தேர்தல் வெற்றிக்காகவும், ஆறாவது முறையாக பிரதமரானதற்காகவும் பிரதமர் மோடி அவரை வாழ்த்தினார் என்றும் இந்தியா-இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை ஒன்றாக முன்னேற்றுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது