“அனைத்து நாடுகளின் உரிமைகளையும் மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” – ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாடு இன்று தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இந்தோ-பசிபிக் பிராந்தியம் பன்முகத்தன்மை வாய்ந்ததாக பல கலாச்சாரங்கள், இனங்கள், பொருளாதார மாதிரிகள், நிர்வாக அமைப்புகள் கொண்டவையாக விளங்கினாலும், பெருங்கடல்கள் ஒரு பொதுவான இணைப்பாகவே இருக்கின்றன. கடல்சார் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் பொதுவான நோக்கங்களை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது. அதே சமயம் ஐ.நா. மாநாட்டின் கடல் சட்டம் 1982-ன் ஆணைகளை இந்தியா முழுவதுமாக ஆதரிக்கிறது. அனைத்து நாடுகளின் உரிமைகளையும் மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
சில நாடுகள் எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது, அமைதிக்கு எதிரானது. எல்லைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ளது. அடுத்த நாடுகளின் எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது. இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கைக்கு சென்று, அங்கிருந்து, கொரியா வரை உள்ள கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது. இதற்கு கடல் வழி இணைப்பு தான் பெரிதும் காரணம்.”
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.