காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கா னிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர்.

இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. ஜெர்மனி,அமெரிக்க படைகளும் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜெர்மனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.