தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் நேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6:52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம், இதர பகுதிகளில் 3 முதல் 5 ஆகப் பதிவானது. 2 மணி நேரத்தில் தொடர்ச்சியான 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

இதேபோல், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.