பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சி, மன நிறைவு தரும் சந்திப்பாக அமைந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதன் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஸ்டாலின் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காரணமாக, பதவியேற்றதும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் தற்போது கட்டுக்குள் வந்த நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி கொடுத்தார். சந்திப்பு மகிழ்ச்சியான,மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது. முதலில், முதல்வராக பதவியேற்றதற்கு எனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என உறுதி வழங்கினார். எந்த கோரிக்கையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார். தமிழகத்தின் கோரிக்கை குறித்து அறிக்கை தயாரித்து பிரதமரிடம் வழங்கி உள்ளேன்

அதில் முக்கியமாக,
* கூடுதலான தடுப்பூசிகள் வழங்க வேண்டும்
*குன்னூர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்பட வைக்க வேண்டும்

*தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்

* மேகதாது திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

*முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்

* காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

* இலங்கை கடற்படையால் தொல்லைக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும்

*கோவையில் எய்ம்ஸ் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும்

* கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்

*சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவதுதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்

*சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்

*உலக பல்கலைகளில் தமிழுக்கு இருக்கை அமைக்க வேண்டும்

* சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்தவேண்டும்

* பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்

* குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என பிரதமரிடம் வைத்துள்ளோம்

கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற மத்திய அரசுக்கு தொடர்ந்த அழுத்தம் கொடுப்போம். டில்லியில் உள்ள தமிழ் பத்திரிகைகளும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். போதுமான அளவுதடுப்பூசி வழங்குவதில், மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் சந்திப்பு அமைந்தது.

கோரிக்கைகளுக்கான காரண காரியங்களை பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பிரதமர் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.