முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மோதியின் மெளனம் பற்றி ஹமீது அன்சாரி கருத்து

முகமது நபி தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் தெரிவித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவது தற்செயலானதல்ல, அதில் ஏதோ அர்த்தம் உள்ளது என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி ஹிந்தி சேவையிடம் கருத்து தெரிவித்த ஹமீது அன்சாரி, “இது மிக முக்கியமான விஷயம்” என்று கூறினார்.

அரபு நாடுகளுடனான பிரதமர் மோதியின் உறவைப் பற்றி ஹமீது அன்சாரி குறிப்பிடுகையில், “பல நாடுகளுடன் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் இந்த விஷயத்தில் காத்து வரும் மௌனம், தற்செயலானது அல்ல. ஒன்று பிரதமர் அதில் உடன்படவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம் அல்லது குறைந்தபட்சம் அதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்றும் கூறலாம். இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து இன்னும் வரவில்லை,” என்று தெரிவித்தார்.

பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்தானது, முகமது நபியின் ஆளுமை மீதான தாக்குதலாகும், இதை உலகில் எந்த முஸ்லிமும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றும் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.