பாகிஸ்தானை சீனாவும் நம்பவில்லை !! தன்னுடைய விசாரணை குழு அனுப்பி தீர விசாரிக்க முடிவு !!

பாகிஸ்தானில் கடந்த வாரம் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் இறந்தனர். இது பற்றி விசாரிக்க சீன குற்ற விசாரணை நிபுணர் குழு பாகிஸ்தான் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 14 அன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அணை கட்டுமானப் பணிகளுக்காக 30-க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள், அளவையாளர்கள், பாகிஸ்தானியர்கள் சென்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் குண்டு வெடித்ததில் 9 சீனர்கள், 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது குண்டுவெடிப்பில்லை என பாகிஸ்தான் கூறுகிறது. இயந்திரக் கோளாறு காரணமாக எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதாக அறிவித்தது.

ஆனால் சீனா இதனை வெடிகுண்டு தாக்குதல் என குற்றம்சாட்டுகிறது. உண்மையை அறிய சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்படும் என சீன பாதுகாப்பு அமைச்சர் சாவோ கெஜி கூறினார். இந்நிலையில் குற்ற விசாரணைக்கான சீன தொழில்நுட்ப நிபுணர் குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. அவர்கள் விசாரணைக்கு உதவுவார்கள் என சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது உள்நாட்டில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. குண்டு வெடிப்பு இல்லை என தெளிவுப்படுத்திய பின்னரும் பிற நாட்டவர்களை எப்படி விசாரணைக்கு அனுமதிக்கலாம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இச்சம்பவம் மூலம் பாகிஸ்தானுக்கு பாஸ் தாங்கள் தான் என சீன காட்டியுள்ளது.