மேற்கு ஆப்ரிக்காவில் 14 வயது ஜிஹாதி சிறுவர்கள் படை தாக்குதலில் 130 பேர் பலி !!

மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் 130 பொது மக்கள் கொல்லப்பட்ட கொடூர தாக்குதலில், அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 14 வயதுக்குட்பட்ட ஜிஹாதி சிறுவர்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கிழக்கு வரை உள்ள மித வறண்ட பகுதி சாஹேல் பிராந்தியம் எனப்படுகிறது. செனகல், மாலி, புர்கினா பாசோ, அல்ஜீரியா, நைஜீர், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் வருகின்றன. இப்பிராந்தியம் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2013ல் வடக்கு மாலியின் பெரும் பகுதிகளை பயங்கரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து இந்நிலை தொடர்கிறது. அப்பகுதி தான் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஜிகாதிகளுக்கான முக்கிய பாதை.

ஜிஹாதி பயங்கரவாதிகளை எதிர்க்க அப்பிராந்தியத்தில் உள்ள அரசுகளுக்கு 5,100-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு படைகள் உதவி வந்தன. அங்குள்ள தலைவர்களுக்குள்ளேயே மோதல்கள் ஏற்பட்டு கொல்லப்படுவதால், ஜனநாயகம் இல்லாத நாட்டை ஆதரிக்க முடியாது என படைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க பிரான்ஸ் அதிபர் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜூன் 4 அன்று புர்கினா பாசோவின் யாகா மாகாணம், சோல்ஹன் என்ற கிராமத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஜிஹாதி நபர்கள் அங்கு கண்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளினார்கள். அங்குள்ள வீடுகள், கடைகளுக்கு தீ வைத்தனர். அதில் 130 பேர் இறந்தனர்.

இத்தாக்குதலை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்., இயக்கங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஜிஹாதி சிறார் படைகளை கொண்டு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐ.நா., மற்றும் புர்கினா பாசோ அரசு உறுதி செய்துள்ளது. கடந்த ஜனவரி தொடங்கி இதுவரை சாஹேல் பிராந்தியத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புர்கினா பாசோவிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இப்பிராந்தியத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க சர்வதேச சமுதாயம் உறுப்பு நாடுகளுக்கு உடனடியாக இரட்டிப்பு ஆதரவு வழங்க வேண்டும் என ஐ.நா., பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.