‘செஸ் ஒலிம்பியாட்’ பிரதமருக்கு முதல்வர் அழைப்பு

சென்னை-சென்னையில் வரும் 28ம் தேதி, ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவுக்கு வரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக, முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் விசாரித்தார். அவருக்கு, முதல்வர் நன்றி கூறியதுடன், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், ‘சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள, உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க, நேரில் வர இருந்தேன். ‘தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். ‘துவக்க விழா நிகழ்ச்சியில், பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்’ என, முதல்வர் அழைப்பு விடுத்தார்.