வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபடமாக 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வரும் 10-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று முதல் 10-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் இன்று (அக்.8) முதல் 10-ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment