ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்

ஆப்கனில் மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது’ என, இந்தியா தலைமையிலான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 1996, செப்.,ல், தலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி, இஸ்லாமிய ராஜ்ஜியத்தை பிரகடனப்படுத்தினர். இந்நிலையில் 2001 செப்.,11ல் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுரங்களை, அல் – குவைதா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதைத் தொடர்ந்து, அல் – குவைதா தலைவர் பின்லேடனை பிடிக்க, அமெரிக்கப் படைகள் ஆப்கன் சென்றன. அங்குள்ள, வடக்கு கூட்டணி கட்சி, அமெரிக்க படையின் ஆதரவுடன், தலிபான்களை விரட்டியடித்தது.

இதையடுத்து, தலிபான்களின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 2001, டிச., 17ல் முடிவுக்கு வந்தது. தற்போது, ஆப்கனில் 90 சதவீத பகுதிகளை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றி விட்டனர். அமெரிக்க ராணுவம் இம்மாத இறுதிக்குள் முழுதுமாக ஆப்கனில் இருந்து வெளியேறிய பின், தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றி, மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை நிறுவ உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி தலைமையிலான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆப்கனில் மீண்டும் வன்முறை தலைதுாக்கி வருவது கவலை அளிக்கிறது. ஆப்கன் பிரச்னைக்கு அந்நாட்டு மக்கள் பிரதிநிதிகள், தலிபான்கள் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். ஆப்கனை மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியமாக பிரகடனம் செய்வதற்கான எந்த முயற்சிக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆதரவளிக்காது. இது, கவுன்சில் உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.