பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – கேரள முதல்-மந்திரி குற்றச்சாட்டு

அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பின் 13-வது தேசிய மாநாடு கேரளாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பேசியதாவது, நாட்டின் பல பாகங்களில் மதரீதியிலான அமைப்புகள், வழிபாட்டு தலங்கள், சில சிறுபான்மை மதத்தினர் சங்பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர். இந்த தாக்குதல்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. இதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பில்கிஸ் பானு, கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்குகளை மேற்கொண்டு பேசிய பினராயி விஜயன், பெண்களுக்கு எதிராக எந்த குற்றங்களையும் செய்யலாம், எந்த வித விளைவுகளும் இல்லாமல் செய்யலாம் என்று அவர்களின் (பாஜக) நடத்தை காட்டுகிறது. இது ஆணாதிக்க மற்றும் ஆண் ஆதிக்க சமூக மனநிலையையும் காட்டுகிறது’ என்றார்.