ஆக., 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணியை, ஆக., 1 முதல் துவங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக, பிற மாநில மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர், சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதேநேரம், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளிலும், பெயர்களை சேர்த்துள்ளனர். தேர்தல் நிலவரத்தை பொறுத்து, எங்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.பொது வினியோக திட்டத்தில், ஆதார் விபரத்தை இணைத்த பின் போலி ரேஷன் கார்டுகள் கண்டறிந்து நீக்கப்பட்டன. ஒருநபர், ஒரு குடும்ப கார்டில் இடம் பெற்றிருந்தால், வேறு எங்குமே பெயர் சேர்க்க முடியாத அளவுக்கு, கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷன், எவ்வளவு தான் இரவு, பகலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும், ஓட்டுப்பதிவு சதவீதம் 70ஐ தாண்டவே இல்லை.காரணம், வாக்காளர் பட்டியல், துல்லியமான தகவல்களுடன் இல்லை.

அதற்கு, ஆதார் விபரங்களை இணைத்தால் மட்டுமே, உண்மையான ஜனநாயகம் உருவாகும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அவ்வகையில், வாக்காளர் பட்டியலுடன், ஆதார் விபரத்தை இணைக்க, தேர்தல் கமிஷன் பச்சைக்கொடி காட்டிவிட்டது. அதற்காக, மாவட்டம் வாரியாக, பயிற்சி முகாம் நடந்து வருகிறது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:வரும் ஆக., 1ம் தேதி முதல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரத்தை இணைக்கும் பணி துவங்கும். வாக்காளர், ‘ஆன்லைன்’ வாயிலாக, தங்களது விபரத்தை இணைத்துக்கொள்ளலாம். அதற்காக, ‘படிவம் -6 பி’ உருவாக்கப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம், படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியும், ஆதார் விபரத்தை இணைத்துக்கொள்ளலாம். இப்பணி, வரும் 2023 மார்ச் வரை நடக்கும். ‘கருடா’, nvsp, ‘voter help line’ போன்ற ‘ஆப்’ வாயிலாக, வாக்காளரே பதிவு செய்து கொள்ளலாம்.வரும், 22ம் தேதி வரை தொடர்ச்சியான பயிற்சி முகாம் நடக்கும். அதற்கு பிறகு, மாவட்ட நிர்வாகம், வாக்காளர் வசதிக்காக, தெளிவான அறிவிப்புகளை வெளியிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.