9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் தலைமை தேர்தல் கமி‌ஷனரை இன்று(புதன்கிழமை) சந்திக்கின்றனர்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி,  நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் என 9 பேர் கொண்ட குழுவும் செல்கின்றனர்.

இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் கமி‌ஷனரை பிற்பகல் 12 மணி அளவில் சந்திக்கிறார்.

சசிகலா நியமனம் செல்லாது

இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வின் ‘அவைத்தலைவர், பொருளாளர் எங்கள் அணியில் தான் இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் மறைந்தநிலையில், அந்த பதவிக்கு சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதிகளில் உள்ளது. அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லை என்றால் ஒருமனதாக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அந்த வழியில்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பொதுச்செயலாளராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருபோதும் இதனை அவர்கள் மாற்றியது இல்லை. சட்டதிட்ட விதியில் இதனை யாராலும் எக்காலத்திலும் மாற்றமுடியாது. ஆனால் ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்த்து 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. எனவே அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது நிச்சயமாக செல்லாது’ என்று முறையிட உள்ளார்.

இரட்டை இலை சின்னம்

அதுமட்டுமல்லாமல் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே கட்சியில் கிடையாது என்றும், அந்த வகையில் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது கட்சி சட்டவிதிகளில் இல்லை. எனவே அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்றும், பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக அவைத்தலைவர், பொருளாளர் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆகவே எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் கோருகிறார்கள்.

சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்காக யாருக்காவது அவர் கையெழுத்திட்டு கொடுத்து இருந்தால் அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக்கொள்ளக்கூடாது, இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்கவேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் அவர்கள் கோரிக்கை வைக்க இருக்கின்றனர்