8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள்.

இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது.

கடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் கடலோர காவல்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே, மாயமாகி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. குளச்சலில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தையொட்டி குளச்சல் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.