7-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்; கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக வந்தனர்

கருப்பு உடை அணிந்து அனைவரும் ஊர்வலமாக சென்றனர்.

7-வது நாள்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இட ஒதுக்கீடுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரக வளாகத்தில் அரசு டாக்டர்கள் 7-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது டாக்டர்கள் ரத்த தானம் செய்தனர். இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் முன்பு சில டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு உடை அணிந்து ஊர்வலம்

சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தும், அவசரமில்லா அறுவை சிகிச்சையை புறக்கணித்தும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து கொண்டும், கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலமாக வந்தனர்.

டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

போராட்டம் குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர் சங்க அமைப்பு செயலாளர் டாக்டர் ராமலிங்கம் கூறியதாவது:-

கடுமையான விளைவு

கோரிக்கைகள் சம்பந்தமாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுகுறித்து சுகாதார துறை செயலாளரிடம் கேட்டபோது, அவர் அவசர சட்டம் இயற்றுவது குறித்து பேசாமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை வாங்கித்தருவதாக கூறினார். இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். நாளை(இன்று) சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆதரவு

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் டி.கே.ரெங்கராஜன் எம்.பி ஆகிய இருவரும் டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.