7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

மும்பை,
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 51–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்ததுடன், 7–வது வெற்றியை கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா 93 ரன்கள் (55 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 36 ரன்னும் (18 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் மேக்ஸ்வெல் 47 ரன்னும் (21 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன்), ஷான் மார்ஷ் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அக்‌ஷர் பட்டேல் 19 ரன்னுடன் (13 பந்துகளில் ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், பும்ரா, கரண்‌ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

மொகித் சர்மா அபாரம்

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி வெற்றியை நெருங்கி வந்து தோல்வி கண்டது. மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிமோன்ஸ் 59 ரன்னும் (32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன்) பார்த்தீவ் பட்டேல் 38 ரன்னும் (23 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் (13 பந்துகளில் 4 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் மொகித் ‌ஷர்மா பந்து வீசினார். முதல் பந்தில் பொல்லார்ட் 2 ரன் எடுத்தார். ஆனால் கிரீசை தொடாமல் 2–வது ரன்னுக்கு ஓடியதால் ஒரு ரன் குறைக்கப்பட்டது. 2–வது பந்தில் பொல்லார்ட் சிக்சர் தூக்கினார். 3–வது, 4–வது, 5–வது பந்தில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் பொல்லார்ட் ஒரு ரன் அடித்தார். இதனால் மும்பை அணி 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பொல்லார்ட் 50 ரன்னுடனும் (24 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன்), ஹர்பஜன்சிங் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் விருத்திமான் சஹா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் சொந்த மண்ணில் மும்பை அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியால் மும்பை அணிக்கு பாதிப்பு எதுவும் கிடையாது. 13–வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி சந்தித்த 4–வது தோல்வி இதுவாகும்.

மேக்ஸ்வெல் மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் கருத்து தெரிவிக்கையில், ‘நான் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் பாதிப்பு ஏற்படுமோ? என்று நினைத்தேன். நாங்கள் 2 கேட்ச் மற்றும் ஒரு ‘ரன்–அவுட்’ வாய்ப்பை தவற விட்டோம். இருப்பினும் கடைசியில் வெற்றி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தீப் ‌ஷர்மா, மொகித் ‌ஷர்மாவுக்கு எல்லா பாராட்டும் சாரும். கடைசி 2 ஓவர்களை அவர்கள் இருவரும் வீசிய விதம் அற்புதமானது. பொல்லார்ட் அச்சமின்றி ஆடியதால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையிலும் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்கி சிறப்பாக ஆடினார். நாங்கள் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் கடைசி வரை கடுமையாக போராடினோம். ஹர்திக் பாண்ட்யா ஆட்டம் இழந்த பிறகு ஆட்டங்கள் எங்கள் கையை விட்டு நழுவியது. ஒரு வீரர் மட்டும் அதிரடியாக ஆடி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியாது. எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இந்த தோல்வியை மறந்து அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும்’ என்று தெரிவித்தார்.