5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பஞ்சாபில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 3, கோவா பார்வர்டு கட்சி 3, சுயேச்சைகள் 3, தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன பெரும்பான்மையை நிரூபிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உத்தராகண்டில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.