5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்க பயிர் கடன்

தமிழ்நாட்டில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

நியாயமான நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில், அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இயற்கை அதன் கொடுங்கரங்களால் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது, அது சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என வகை பிரித்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தான் ஏற்படுத்துகிறது.

பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது அதை எந்த விவசாயியாலும் தாங்க முடியாது என்பது தான் உண்மை. இத்தகைய சூழலில் இழப்பை சமாளிக்க நிவாரணம் வழங்கும்போது, எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் அதை வழங்குவது தான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.

அரசு முன்வர வேண்டும்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யத் தீர்மானித்தபோது, பயனாளிகளை சிறு, குறு, பெரு விவசாயிகள் என வகைப்படுத்தவில்லை. மாறாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகைக்கு மட்டுமே உச்சவரம்பு நிர்ணயித்தனர். இதனால் அனைத்து வகையான விவசாயிகளுக்கும் பலன் கிடைத்தது. இதுதான் சரியான அணுகுமுறை.

எனவே, கொள்கை முடிவு என்பன போன்ற நிராகரிக்கப்பட்ட சொத்தை வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைத்துக் கொண்டிருக்காமல், 5 ஏக்கருக்கும் அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். முடிந்தால், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.