21-ந் தேதி கட்சி பெயர், கொள்கைகளை அறிவிப்பது தொடர்பாக கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். அன்றைய தினம் மாலை மதுரையில் ரசிகர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை கமல் ஹாசன் அறிவிக்கிறார். அப்போது கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், கட்சி கொள்கை, திட்டங்களையும் வெளியிடுகிறார்.

முன்னதாக, ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களுடன் கமல்ஹாசன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள வக்கீல்களும் பங்கேற்றார்கள்.

சுற்றுப்பயண ஏற்பாடுகள், பொதுக்கூட்டம், கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் கமிஷனில் கட்சியை பதிவு செய்வதற்கான பிரமாண பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சி பெயரை அறிவித்த பிறகு, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யலாமா? அல்லது அதற்கு முன்னதாகவே பதிவு செய்ய வேண்டுமா? என்பது குறித்து வக்கீல்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் அலுவலகம் முன்னால் நேற்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் போட்டபடி இருந்தனர். வெளி ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள்.

இதற்கிடையே, கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், சினிமாவை விட்டு விலகப்போவதாக அறிவித்தார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

அரசியலில் முழுமையாக ஈடுபடப்போகிறேன். நான் நடிக்கும் இரண்டு படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன. அந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவது இல்லை. எனது வங்கி கணக்கை மேம்படுத்திக்கொள்ள அரசியலுக்கு வரவில்லை. என்னால் மகிழ்ச்சியாக ஓய்வெடுத்துக்கொண்டு வாழ முடியும்.

ஆனால் வெறும் நடிகனாக மட்டும் வாழ்ந்து மறையக் கூடாது என்பதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன். மக்களுக்கு சேவைகள் செய்துதான் எனது வாழ்க்கை முடியும். முதல்வர் ஆவது எனது கனவு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதே கனவாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணம் 10, 12 வருடங்களுக்கு முன்பே எனக்கு வந்து விட்டது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

சினிமாவை விட்டு விலகப்போவதாக அவர் திடீரென்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த தகவலை நேற்று மாலை மறுத்த கமல்ஹாசன், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.