2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார்.

யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.

நடியா முராத்படத்தின் காப்புரிமைMARK WILSON/GETTY IMAGES
Image captionநடியா முராத்

மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய 331 பெயர்கள் முன்மொழியப்பட்டன. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

டெனிஸ் முக்வேகய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionடெனிஸ் முக்வேகய்

டெனிஸ் முக்வேகய்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள முக்வேகய்யும் அவரது சகாக்களும் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். போர் நிகழ்வுகளில் நடத்தப்படும் வன்புணர்வால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர்கள் ஒரு நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்துள்ளனர்.

நடியா முராத்

2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். பிடியில் இருந்து தப்பிவந்த நடியா முராத் யாசிதி சமூக மக்களை விடுதலை செய்வதற்கான, ஆள் கடத்தலை தடுப்பதற்கான இயக்கத்தின் முகமாக ஆகியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் 2018ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதுவரை இயற்பியலுக்கு நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் இவர். கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக இயற்பியல் நோபல் பரிசு பெற்றவரும் இவரே. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின் மற்றும் பிரான்சின் ஜெரார்ட் மொரூ ஆகியோருடன் இணைந்து டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் இந்தப் பரிசைப் பெற்றார்.