2ஜி தீர்ப்பில் அரசு உடனே மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்: சு.சுவாமி

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்து, அரசு தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச. 12 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோருக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.அதேபோல மற்றோரு பதிவில், ”முதலில் உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலையான போதும் இப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் திருப்பிப் போட்டது. அதுதான் இங்கேயும் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார் சுவாமி.

வழக்கு கடந்து வந்த பாதை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.