10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

ஆஸி.,யில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதிக தண்ணீர் குடிப்பதாகக் கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 5 நாள் திட்டத்தை துவக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, ஒட்டகங்களை கொல்வதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. அதிகளவு உணவு, குடிநீர் அருந்துவதாலும், உள்கட்டமைப்பை சேதப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாலும் ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மரிதா பகர் என்பவர் கூறுகையில், ஒட்டகங்கள் தங்களுக்கு பெரிய தொந்தவு கொடுக்கிறது. எங்கள் வீட்டு மேற்கூரைகளை தட்டுகிறது. வீடுகளில் ‘ஏசி’க்களில் உள்ள தண்ணீரை குடிக்கிறது. இதனால், வெப்பம் அதிகரிப்பதுடன், அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் முதல் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க பெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், சிலர் உயிரிழந்தனர். லட்சகணக்கான உயிரினங்கள் இறந்துள்ளன. அல்லது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன.