ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி மூன்று வார காலமாக மக்கள் ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலவளம், நீர்வளம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்கின்றனர்.

நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்த போது திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று வாய்மொழியாக உறுதிமொழி கொடுத்துள்ளாரே தவிர, எழுத்துபூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை அரசு வெளியிடவில்லை.

ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர்குழுவை அமைத்ததுடன், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்து 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் உத்தரவிட்டார். இதன் விளைவாக இப்போது வரை அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறேன்.

எனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்று மாநில அரசு வற்புறுத்த வேண்டும். அதே நேரத்தில், போராடும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும்” என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.