ஹிந்து பெண்ணை கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிமுக்கு திருமணம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிம் நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ஹிந்து பஞ்சாயத்து அமைப்பின் பொது செயலர் ரவி தவானி கூறுகையில், கடந்த 15ம் தேதி சிந்து மாகாணத்தின் மதியாரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி திருமணத்தின் போது கடத்தி செல்லப்பட்டு கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், கராச்சியில் ஷாருக் மேமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க நாங்கள் உதவி செய்தோம். போலீசார் கராச்சி சென்று, சிறுமியை மீட்டு சிந்து மாகாணம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால், கடத்தல்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் வழக்குகள் குறித்து தெரியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களில் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது இது மூன்றாவது சம்பவம். மிர்புர் காஸ் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடத்தி செல்லப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டார். பின்னர் குலாம் முஸ்தபா என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்த திருமணத்தில், அந்த இளம்பெண்ணுக்கு விருப்பம் உள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் சிந்து மாகாணத்தில் உள்ளமாதா ராணி கோயிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர், ஜாகோபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமதி கடத்தி செல்லப்பட்டார். அவரை போலீசார் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, அவரது வயது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.