“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார்.

ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம் சிறிசேனா கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்” என்றார்.