”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார்.

உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளார்.

1979-ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர், இரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரானுக்கு செல்லும் வெளிநாட்டுப் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்.

இந்நிலையில், கட்டாயத்தின் பெயரின் ஹிஜாப் அணிந்துகொண்டு போட்டியில் கலந்துகொள்ள தமக்கு விருப்பம் இல்லாததால் இரானில் நடக்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளபோவதில்லை என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சௌமியா கூறியுள்ளார்.

சௌமியா சுவாமிநாதன்படத்தின் காப்புரிமைFACEBOOK/SOUMYA SWAMINATHAN

”இரானில் உள்ள சட்டதிட்ட நிபந்தனை எனது அடிப்படை உரிமை, பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், எனது உரிமைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி இரான் செல்லாமல் இருப்பபதுதான்” என சௌமியா குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது எங்களது தேசிய அணியின் உடையையும், விளையாட்டு உடையையும் அணிய வேண்டும் என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதை நான் புரிந்து கொள்றேன் என கூறியுள்ள சௌமியா, விளையாட்டுகளில் மதக் குறியீடு கொண்ட உடைகளை அணிய நிர்ப்பந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மிகுந்த பெருமை கொள்வதாக கூறியுள்ள செளமியா, தற்போது நடக்கும் முக்கியமான போட்டியில் கலந்துகொள்ள முடியாததால் வருத்தமடைகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ”விளையாட்டு வீராங்கனையாக, விளையாட்டுக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், விளையாட்டுதான் எங்களது வாழ்க்கையின் முன்னுரிமை. ஆனால், சில விஷயங்களில் நிச்சயம் சமரசம் செய்துகொள்ள முடியாது” என தெரிவித்திருக்கிறார்.

செளமியா மட்டுமல்ல, முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது செஸ் வீராங்கனையான நாஸி பாயிசிஸ்-பார்னேஸும் ஹிஜாப் விவகாரத்தால் 2017-ல் இரானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.

”பெண்களுக்கு அடிப்படை உரிமை இல்லாத ஒரு இடத்தில், பெண்களுக்கான உலக செஸ் போட்டியை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என நாஸி அப்போது கூறியிருந்தார்.

2017 உலக செஸ் போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் அல்லது பெண்கள் தங்களது தலையை மூடுவதை அவரவர் விருப்பத்திற்குரியதாக மாற்ற வேண்டும் என கேட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் மனுவும் கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது இந்தியாவைச் சேர்ந்த செளமியாவின் கருத்துக்களும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், செளமியாவின் கருத்து குறித்து பிரபல செஸ் வீராங்கனையும், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டருமான ஹம்பி கோனேரு பிபிசி தமிழிடம் பேசினார்.

”இஸ்லாமிய நாடுகளில் ஸ்கார்ஃப், ஹிஜாப் அணிந்து விளையாடுவது என்ற வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான்கூட ஸ்கார்ஃப் அணிந்து போட்டியில் பங்கேற்றிருக்கிறேன்” என்கிறார்.

ஸ்கார்ஃப் அணிய வேண்டும் என்பது சில இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் விதிகளை ஏற்றுக்கொண்டு விளையாடச் செல்வதும் அல்லது தவிர்ப்பதும் போட்டியாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் பெண் கிரிக்கெட் வீராங்கனையான சாந்தா ரங்கசாமி இதுபோன்ற விதிகளை தான் முற்றிலும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

”விளையாட்டுகள் தொடர்பாக எல்லா நாடுகளிலும் ஒரே விதி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி விதி இருக்கவே கூடாது. ஒரே மாதிரியான விதிகளை ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் போட்டிகளை நடத்தக்கூடாது” என்கிறார் சாந்தா.

சர்வதேச போட்டிகளில் உள்ளூர் விதிகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என சாந்தா கேள்வி எழுப்புகிறார்

”தற்போது இரானில் நடக்கவிருக்கும் போட்டியில் கலந்துக்கொள்ளாததன் மூலம், சௌமியா தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆனால், தனது உரிமைக்காக எதிர்ப்பு குரல் கொடுத்த செளமியாவை நினைத்துப் பெருமைப்படவேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.