ஸ்ரீதேவி இறப்பு பற்றிய புதிய தகவல்: உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியானது

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையும் தடயவியல் அறிக்கையும் வெளியானது அதில் அவரது மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. குளியல் அறை தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் பிரபலமானவர். 50 ஆண்டுகாலம் திரைத்துறையில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இந்தியா முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து மும்பையிலேயே வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு சுபைரா எமிரேட் டவர்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மரணமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. அவரது உடலை உடற்கூறாய்வுக்கு பின்னே தரப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிர்வாகம் தெரிவித்து விட்டது.

உடற்கூறாய்வு மட்டுமல்ல தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது. இதனால் ஸ்ரீதேவியின் உடலை துபாயிலிருந்து மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. துபாயில் ஸ்ரீதேவி உடல் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பின் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வு முடிந்தது. தடயவியல் அறிக்கையும் வெளியானது. அதில் ஸ்ரீதேவியின் மரணம் நீரில் மூழ்கிய விபத்து மரணம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது மரணம் விபத்தால் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாகவும் இதில் சதிச்செயல் எதுவும் இல்லை என்று துபாய் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாக உடல்கூறாய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குளியல் அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டதில் ஆய்வு செய்ததில் அதில் ஆல்கஹால் கலந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் உள்ள பிரச்சினை நீக்கப்பட்டு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். மரணச்சான்றிதழும் வழங்கப்படும். இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்துவிடும் என்று கூறப்படுகிறது.