‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்காக மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக நிபுணர் குழு கூடியது. அதில், தற்போது ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும். இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உலகிலேயே முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6 சதவீதம் செயல் திறன் கொண்டதாகும்.