ஸ்டாலின் ஆதரவாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடுமையாக கலாய்ப்பு

காவேரி மருத்துமனையில், சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை பற்றி விசாரிக்க வரும், ஸ்டாலின் ஆதரவாளர்களை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கடுமையாக கலாய்ப்பதால், அவர்கள் தலைதெறிக்க, ஓட்டம் பிடிப்பதாக, கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

வயது முதிர்வு காரணமாக உடல் நலிவு அடைந்துள்ள கருணாநிதி, நான்காவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் விசாரிக்க, தலைவர்கள் பிரமுகர்கள் தினமும், மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.நான்காவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருக்கும், குடும்பத்தினரை சந்தித்து, கருணாநிதியின் நலம் பற்றி விசாரித்துசெல்கின்றனர். அழகிரி, தன் மனைவி காந்தியுடன், ஒரு அறையில்தங்கியுள்ளார்.மருத்துவமனை வாசல் அருகில் நின்றுக் கொண்டிருக்கும், தலைமை நிலைய நிர்வாகிகள் கு.க.செல்வம், பூச்சி முருகன் ஆகியோர், யாரை அனுமதிக்க வேண்டும் என்பதை, ஸ்டாலினிடம் கேட்டு, உள்ளேஅனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் முன்னாள், எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம் வந்தார். அப்போது, அங்கு வந்த அழகிரியிடம், கு.க.செல்வம் வலியச் சென்று, ‘வைத்தியலிங்கத்தை உள்ளே அனுப்பி வைக்கட்டுமா’ என,கேட்டுள்ளார்.உடனே, அழகிரி, ‘அவர் கட்சியில சீனியர்… யார் யார் மூத்தவங்கன்னு, விபரம் தெரியாம இருக்கீங்களே… உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கணும்… அப்படி வைக்காமல் போனதால் தான், இப்படில்லாம் நடக்குது’ன்னு பாய்ந்திருக்கிறார். உடனே, கு.க.செல்வம், அங்கிருந்து நகர்ந்தார்.அந்த காட்சியை, அ.தி.மு.க., விலிருந்து வந்து தி.மு.க.,வில் கோலோச்சும் ‘மாஜி’ எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பார்த்தனர். ‘எங்கே நம் மீது பாய்ந்து விடுவாரோ…’ என்ற பயத்தில்,அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.நான்காவது மாடியில், அழகிரியை சந்தித்த, முன்னாள் அமைச்சர் ஒருவரும், கட்சியின் முதன்மைபதவியில் இருக்கிற ஒருவர், ‘நீங்க மருத்துவ மனைக்கு மட்டும் வந்துட்டு, அப்படியே மதுரைக்கு போய்டாதீங்க… ஸ்டாலினை எல்லாரும், ஏமாற்றி விட போறாங்க’ என

சொன்னதும், அழகிரி ஆவேசமாகி விட்டார்.’என்னய்யா… கிள்ளி விடுறயா?’ என, முகத்தில் அடித்தது போல கேட்டதும், அந்த மாஜியின் முகம் சுருங்கி விட்டது.

அவரை தொடர்ந்து, ராஜ்யசபா, எம்.பி., ஒருவர், அழகிரியை சந்தித்ததும், ‘வணக்கம் அண்ணே’ என, கூறியிருக்கிறார். உடனே அழகிரி, ‘வணக்கமெல்லாம் இருக்கட்டும்; என்னை தாக்கி அறிக்கை எழுதணும்னா, இஷ்டத்திற்கு எழுதறதா… நீங்கல்லாம், கட்சியில பெரிய தலைவராக ஆகிடலாம்னு பாக்கறீங்களா… எல்லாத்தயும்கவனிச்சுட்டு தான் இருக்கேன். நீங்க நினைக்கிறதுல்லாம், என்கிட்ட நடக்காது’ என,கடுப்படித்துள்ளார்.அந்த ராஜ்யசபா, எம்.பி., வாயே திறக்காமல், அங்கிருந்து சென்றுவிட்டாராம்.கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது, தலை நிறைய பூ வைத்திருந்தார். அதை பார்த்ததும், அழகிரி, ‘மருத்துவமனைக்கு வந்துருக்காங்களா… இல்லை, ‘பிக்னிக்’ வந்திருக்காங்களா’ என்று, கோபப்பட்டுள்ளார்.கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அன்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர்,மாடி அறைக்குள் வந்துள்ளார். அவரை வெளியே நிற்கும்படி, அழகிரி கூறிவிட்டார்.இதனால் அந்த மாஜி அழகிரி மீது அதிருப்தியில் இருக்கிறார்.