வைகோ ஜாமீனில் விடுதலை: தமிழக அரசின் கல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு பாராட்டு

தேச துரோக வழக்கில் சிறை சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் வெளிவந்தார். 52 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து விடுதலையான வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “52 நாட்களாக சிறையில் நான் என்னையே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போதுகூட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் ஜாமீனில் வெளிவந்துள்ளேன்.
தமிழக அரசு கல்வித்துறையில் கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்கள் பாராட்டுக்குரியது. குறிப்பாக ரேங்க் பட்டியலை ஒழித்து பள்ளி மாணவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்தது வரவேற்கத்தக்கது. சிபிஎஸ்இ கல்வி முறைக்கு நிகராக மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அமைச்சர் செங்கோட்டையனுக்கு எனது பாராட்டு.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. டாஸ்மாக் போராட்டம் யாருடைய தூண்டுதலிலும் நடக்கவில்லை. இது மக்கள் புரட்சி. மக்கள் எழுச்சியை காவல்துறையால் ஒடுக்க முடியாது. இனியும் மதுக்கடைகளை நடத்த முடியாது என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே, டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்குவதை விடுத்து முழு மதுவில்லக்கை அமல்படுத்தி அரசு நன்மதிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.