வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ரோகித் சர்மா இல்லாததால் ரிஷாப் பான்ட்டுக்கு தொடக்க ஆட்டக்காரர் வாய்ப்பு கிடைக்கலாம்.

அணி விவரம்

15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ரஹானே, டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளேவின் பதவி காலம் முடிவடைவதால் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விரைவில் நேர்காணல் நடக்க இருக்கிறது. கும்பிளேவும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். என்றாலும் பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி காலஅவகாசம் கேட்டு இருப்பதால், வெஸ்ட்இண்டீஸ் தொடர் வரை கும்பிளே பயிற்சியாளராக தொடருவார்.