வெளியானது கருணாநிதி புகைப்படம்: கைகளில் கொப்பளங்களுடன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியானது.
ஒரே நேரத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சியின் தலைமைகள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவது ஒருவித அச்சத்தை உருவாக்கியது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதால் அவரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதியின் புகைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்தது.
இந்நிலையில் ஒருமாதம் கழித்து இன்று திமுக தலைவர் கருணாநிதி அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் என்னை சந்தித்து உடல் நலம் விசாரித்த போது என கூறப்பட்டுள்ளது. கைகளில் கொப்பளங்களுடன் இருக்கும் கருணாநிதியை அன்பழகன் உடல் நலம் குறித்து விசாரிக்கும் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அருகில் இருந்தார்.