வெளிநாட்டில் சொத்து: நளினி, கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

லண்டன் அருகே கேம்பிரிட்ஜ் நகரில் சொத்து வாங்கி அதனை மறைத்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் அவரது மகன் கார்த்தி மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர தடை விதிக்கக்கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது வருமான வரித்துறை.வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை மறைத்து வைத்ததாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.