வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வகையிலான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதுபோன்று டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ரூ.389 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி உள்ளது.

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை கடந்த ஒன்றாம் தேதி ஒப்புதல் வழங்கியது.

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு வழக்கை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்ப மறுப்பவர்கள் போன்றவர்களின் சொத்துகளை இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பறிமுதல் செய்யமுடியும். குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்படாமலே அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும், கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி செலுத்தவும் இந்த மசோதா அனுமதி வழங்குகிறது.

பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும். கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு மீதி தொகையை அவர்களிடம் திருப்பி கொடுக்கும். நிரவ் மோடி தப்பி ஓடியதை அடுத்து மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், “தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 தலைமறைவாகும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளின் வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் மசோதாவில் ஷரத்துக்கள் உள்ளது, ஆனால் வெளிநாடுகளின் ஒத்துழைப்பு என்பது அவசியமாகும்,” என தெரிவித்தார். இம்மசோதாவை இப்போது நடந்து வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் நிறைவேற்றிவிட மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் வகை செய்யும் வகையிலான புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி செல்வோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படும். ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்று தப்பி ஓடுவோரே இதில் கணக்கில் கொள்ளப்படும்.

தற்போதைய நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் மூலமும் மோசடி பேர்வழிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். ஆனால் அது வெறும் மோசடி மூலம் பெற்ற சொத்துகளை மட்டுமே, அதுவும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே பறிமுதல் செய்ய முடியும். ஆனால் இந்த புதிய மசோதாப்படி, அவரது சொத்துகள் எதுவானாலும் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.