வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி… தலையைக் கடித்துக் குதறின!

மும்பை: பிரபல கன்னட நடிகை பாருல் யாதவை மும்பையில் வெறிநாய்கள் தாக்கி, கடித்துக் குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கன்னடப் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாருல்யாதவ். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘ட்ரீம்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

புலன் விசாரணை இரண்டாம் பாகத்தில் பிரசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வீரப்பன் வாழ்க்கை கதை படத்தில் அதிரடிப்படையினருக்கு வீரப்பனை காட்டிக்கொடுக்கும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.

பாருல் யாதவ் குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தான் வளர்க்கும் வெளிநாட்டு நாயுடன் தினமும் வாக்கிங் போவது வழக்கம். நேற்றும் வீட்டுக்கு அருகே நாயுடன் வாக்கிங் போனபோது, அவரது நாயை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்தன.

அவற்றிடம் இருந்து நாயைக் காப்பாற்ற பாருல் யாதவ் முயன்றார். அப்போது அந்த 6 நாய்களும் பாருல் யாதவ் மீது பாய்ந்து அவரை உடம்பு முழுவதும் ஆவேசமாகக் கடித்து குதறின.

பாருல் யாதவ் அலறலைக் கேட்ட பக்கத்து அடுக்குமாடி குடியிருப்புவாசி ஒருவர் ஓடிவந்து நாய்களை விரட்டினார். பாருல் யாதவ் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலையில் ஆழமாக நாய்களின் பற்கள் பதிந்துள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.