‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல: இயக்குநர் தகவல்

அஜித் நடித்தில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

‘விவேகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பவுள்ளது படக்குழு.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதற்கு படக்குழு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

தற்போது, “விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா. மேலும், அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாடலான ‘Surviva’ இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது