விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயலின்மை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தீவிர வறட்சி நிலைமை, கடினமான வாழ்வாதார நிலை போன்றவை குறித்து தமிழக அரசின் செயலின்மை மற்றும் மவுனம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘மனிதார்த்த கரிசனைகள்’ இன்றி தமிழக அரசு உள்ளது என்று கவலை வெளியிட்டார். விவசாயிகளைக் காப்பது மாநில அரசுகளின் கடமை இவர்களில் பலர் கடந்த 31 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர், என்றார் அவர்.

மேலும், தமிழக அரசு இதில் காட்டும் மெத்தனப் போக்கும் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டுமே தவிர எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பது கூடாது.

“விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் மாநில அரசு இன்னமும் கூட அமைதியாக இருப்பது அபாயமணியை ஒலிக்கிறது, என்று நீதிபதி மிஸ்ரா கவலையுடன் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக அரசு இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மே 2-ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம்தான் விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது பற்றி நீதித்துறை மேற்பார்வையில் தெரியவரும்.

இது தொடர்பாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட துறைசார் ஆலோசகரும் வழக்கறிஞருமான கோபால் சங்கர நாராயணன் கூறும்போது இதே நிலைதான் மகாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள்ல் சந்தித்து வருகின்றனர், என்றார். ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிமன்ற அமர்வு பலதரப்பு பிரச்சினையும் பேசி இந்த விவகாரத்தை ‘நீர்த்துப் போக’ செய்ய விரும்பவில்லை, இப்போதைக்கு தமிழக விவசாயிகள் நிலை மீது மட்டுமே கவனம் செலுத்துவோம் என்றார்.

“இங்கு தொடரப்பட்ட நூறு வழக்குகளில் ஒன்றல்ல இந்த வழக்கு, இந்த விவகாரம் பொறுப்பு மிகுந்த மனிதார்த்த அக்கறைகளை எழுப்புகிறது” என்றார் தீபக் மிஸ்ரா.

பொதுநல மனுக்களுக்கான தமிழக மையம் தமிழக விவசாயிகளின் துயரத்தையும் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்தும் மேற்கொண்ட மனுவின் அடிப்படையில் இன்றைய விசாரணை நடைபெற்றது.