விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடி போராட போவதாக தகவல் வெளியானதை அடுத்து அதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.  போலீசாரின் தடையையும் தாண்டி இன்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டனர். அவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீனவர்களை பாதுகாக்க கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். கடலில் இறங்கிய இந்த மாணவர்களை கைது செய்ய போலீசாரும் கடலில் இறங்கினர்.

ஆனால் போலீசார் நெருங்க நெருங்க… மாணவர்கள் கடலின் உள் பகுதிக்குள் செல்ல தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் செய்வது அறியாமல் தவித்தனர்.

மீண்டும் மீண்டும் போராடி கடலின் உள்பகுதிக்குச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சென்னை மெரினாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.