விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு; இயக்குநர் கவுதமன் கைது

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண் சோறு, நிர்வாணப் போராட்டம் என பல்வேறு கடுமையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தை மறித்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் இரும்புச் சங்கிலியால் சாலையை மறித்து பூட்டு போட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் சென்னையின் முக்கியமான போக்குவரத்து மார்க்கம். தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு வெளியூர் பேருந்துகளும் இவ்வழியாகவே வர வேண்டும். மேலும், விமான நிலையம் செல்வதற்கும் பிரதான பாதை இதுவே. காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர் அதிகம் பயன்படுத்தும் இந்த பாலத்தை முடக்கி இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.

இயக்குநர் கவுதமன் கைது:

போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீஸார் சங்கிலியை உயர்த்திப் பிடித்துக்கொண்டே வாகனங்களை அதன் கீழே அனுமதித்தனர். சங்கிலிக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் அதை அறுத்தெடுத்த போலீஸார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். போராட்டத்தை முன்னெடுத்த இயக்குநர் கவுதமனை கைது செய்தனர். அவருடன் போராட்டக் களத்திலிருந்த ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.