விமானப்படை விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி சென்னை வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்

விமானப்படை பிரிவு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு சென்னை வந்தார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பிரிவுக்கு விருது வழங்கும் விழாவும், அடையாறில் இந்திய பெண்கள் விழாவும் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு தனி விமானத்தில் சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

தாம்பரம் விமானப்படை விழாவில் பங்கேற்க இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து தாம்பரத்துக்கு காரில் வருகிறார். பின்னர் அடையாறில் நடக்கும் பெண்கள் தின விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து காரில் விமான நிலையம் சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

சென்னையில் குடியரசுத் தலைவர் பயணம் செய்ய உள்ள பாதைகளில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத் தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை, அங்கிருந்து தாம்பரம் விமானப்படை தளம் – அடையாறு – சென்னை விமான நிலையத்துக்கு என கார் ஒன்றை ஓட்டிச்சென்று எவ்வாறு பாது காப்பு அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தப் பட்டது.